கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். புகைப்படத்தை பாருங்கள்.
பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா...? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா...? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன்.
இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார்.
கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன.
நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.
பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள்.
மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது.
அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன்.
எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.