Saturday, October 10, 2009



நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ரொக்கெட்டுக்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.

மொத்தம் 2 ரொக்கெட்டுக்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் 'சென்டார்' என்ற ரொக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ரொக்கெட் மோத விடப்பட்டது.

2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட், மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து 'ஷெபர்டிங்' என்ற 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. முதல் ரொக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ரொக்கெட்டும் விடப்பட்டது.

நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஆய்வுக்காக 'எல்கிராஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவியதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கவனம் நிலவின் மீது திரும்பியுள்ளது. 'எல்கிராஸ்' அனுப்பும் திட்டத்தின் செலவு 100 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆவது ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான முக்கியத் தகவல்களுக்கும் இந்த 'எல்கிராஸ்' திட்டம் உதவும்.

'எல்கிராஸ்' செயற்கைக் கோள், ஜூன் 18ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஷெபர்டிங் ரொக்கெட்டில், அறிவியல் சார்ந்த அதி நவீன சாதனங்களும், நவீன கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு ரொக்கெட்டுக்கள் மூலமும் நாசாவுக்கு பல்வேறு தகவல்கள் அனுப்பப்படவுள்ளன. அதை ஆய்வு செய்து நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது நாசா.