Saturday, November 28, 2009

ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு



இந்தியா முழுவதும் உள்ள ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வரும் திங்கள் கிழமை முதல் துண்டிக்கப்படுகின்றன.

செல்போன்', வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிட்டது. செல்போன் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. மேலும் கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன.


செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.


ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண் தான் உதவுகிறது.


ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.


எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை `கெடு' விதித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.


அந்த `கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.


எந்த செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லையோ அல்லது எல்லா குறியீட்டு எண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறதோ அந்த செல்போனில் இருந்து செய்யப்படும் அழைப்புகள் மற்றும் பெறப்படும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறி இருக்கிறது.


இதுகுறித்து, இந்திய செல்போன் சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மகிந்திரூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இந்திய தொலைத்தொடர்பு துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சராசரியாக ஒரு மாதத்தில் புதிதாக 1 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதே எண்ணிக்கையில் புதிய செல்போன்களும் உபயோகத்துக்கு வருகின்றன. இந்தியாவில் உபயோகத்தில் உள்ள 50 கோடி செல்போன்களில் கணிசமானவை ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் ஆகும்.


இத்தகைய ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் உபயோகத்தில் இருப்பதாக கண்டு அறியப்பட்டு உள்ளது. இது உபயோகத்தில் உள்ள மொத்த செல்போன்களில் 5 சதவீதம் ஆகும். இந்த செல்போன்கள் விற்பனையால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய செல்போன்களை விற்பனை செய்ய மத்திய தொழில் துறை மற்றும் வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே தடை விதித்து இருக்கிறது. எனவே,


ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். ரகசிய குறியீட்டு எண் இல்லாத சட்ட விரோதமான செல்போன்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றின் இணைப்பை 30-ந் தேதி முதல் துண்டிக்குமாறு தொலைத்தொடர்பு துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.


செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment