முகூர்த்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால் திருமணம் நின்றது. அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர். |
சென்னை கே.கே.நகரை சேர்ந்த எம்காம் பட்டதாரி பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை திருமண வரவேற்பு நடந்தது. மாலை 6 மணிக்கு மணமகன் மட்டும் மேடையில் இருந்தார். மணமகள், அலங்காரத்துக்கு சென்றவர் இரவு 7 மணிக்குதான் திரும்பியுள்ளார். பின்னர் மேடைக்கு வரும்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் மணமகள் அறைக்கு அவரை அழைத்து சென்றனர். மணமகன் மட்டும் மேடையில் அமர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் இரவு 11 மணிக்கு, "எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை" என்று மணமகள் கூறியுள்ளார். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்களும் நண்பர்களும் மணமகளிடம் அதிகாலை 4 மணி வரை பேசி பார்த்தனர். ஆனால், திருமணத்துக்கு கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை. அவருக்கு ஆதரவாக அம்மாவும் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த மணமகன் வீட்டார், அதிகாலை 4 மணிக்கு திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள், சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தன. தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மேடையில் மணமகளின் பெயரை மட்டும் கிழித்துவிட்டு "தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று எழுதி வைத்து விட்டு மணமகன் வீட்டார் சென்றனர். மணமேடை வரை வந்து, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சாதாரண ஒரு காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று மணமகன் வீட்டார் வேதனையுடன் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் போலீசில்கூட புகார் தெரிவிக்கவில்லை. |
No comments:
Post a Comment