Thursday, October 29, 2009

சிறந்த தரத்தையுடைய முதல் பத்து நகரங்களின் பட்டியலில் சுவிஸின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன



சிறந்த தரத்தையுடைய நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூரிச், ஜெனீவா மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் உலகின் மிகச் சிறந்த தரத்தையுடைய முதல் பத்து நகரங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இரண்டாவது இடத்தை சூரிச் நகரமும், மூன்றாம் இடத்தை ஜெனீவா நகரமும், ஒன்பதாம் இடத்தை பேர்ன் நகரமும் பிடித்துள்ளன.

வரலாற்றுச் சிறப்பு, அமைவிடம், மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அபிவிருத்திக் கொள்கைகள் என்பனவற்றின் காரணமாக சுவிஸ் நகரங்கள் சிறந்த தரத்தைக் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் உள்ள மெர்சியர் ஆராச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீட்டின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உலகின் 420 நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பல வருடங்களாக சூரிச், ஜெனீவா மற்றும் பேர்ன் ஆகிய நகரங்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, October 21, 2009

தரிசனம்


தினமும் அவள் வீட்டை
கடக்கும்போது தானாகவே
என் கால்கள் வேகத்தை
குறைத்துக்கொள்ளும்
அவள் வீட்டு வாசலை
பார்த்த படியே நடந்து
செல்வேன் என்
தேவதையின் தரிசனத்துக்காக

எத்தனையோ முறை
முயற்சித்தும் என்
காதுகளுக்கு மட்டும் அவள்
காந்தக்குரலை
கேட்கும் பாக்கியம்
கிட்டவே இல்லை

திடீரென அவள் வீடு
பூட்டிக்கிடந்தது ஒரு நாள்
இரண்டு, மூன்று, பதினெட்டு
மாதங்கள் அவள் தரிசனம்
இன்றி ஏங்கினேன்

என் வீட்டு வாடகை
முடிந்து வேறு வீட்டுக்கு
மாறி விட்டேன் முதல் நாளே
மொட்டை மாடியில்
நான்..........
கால்கள் நழுவி அந்தரத்தில்
நிற்பதுபோல் ஓர் உணர்வு
ஓ நான் காண்பது கனவா
எதிர்வீட்டு மாடியில்
என் தேவதை

இப்போதேல்லாம் நான்
நினைத்தது போலவே
இரண்டு முறையாவது
எனக்கு தரிசனம் தந்து
விடுவாள் என் தேவதை
தன் இரண்டு மாத
கைக்குழந்தையோடு...

Wednesday, October 14, 2009

எப்போது புரியும்

என் கவிதைகளை மட்டுமே
வாசித்து பழகிய நீ என்
கண்களை கவனித்திருந்தால்
உன்னோடு நான் வாழ்ந்து
கொண்டிருப்பது எப்போதோ
உனக்கு புரிந்திருக்கும்

பேருந்தில் ஆசையாய் உன்னருகில்
அமர்வது கூட நாம் சுவாசித்த
காற்றாவது ஒன்று சேரத்தான்

என் கையால் முற்றுப்புள்ளி
வைக்க வேண்டிய கவிதை நீ
ஏன் இன்னொரு கவிஞ்சனை
தேடிக்கொண்டிருக்கிறாய்.

* * * * * *

Monday, October 12, 2009

என் பள்ளிப்பருவ ஹீரோ

1982- 2000 என் வாழ்க்கையில் மறக்க முடியாத என் பள்ளிப்பருவம் அதிலும் என் எட்டாம் வகுப்பு வரை நாங்கள் படித்தது லக்கம் தனியார் தோட்டத்தில் ஒரு சிறிய பள்ளியில், அப்போது நான் கேள்வி பட்டிருக்கிறேன் அது வெள்ளையர்கள் காலத்தில் குதிரைகள் அடைத்து வைப்பதற்காக கட்டப்பட்டதாம் என் எட்டாம் வகுப்புவரை அங்குதான் படித்தேன்.

எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். வழியில் மழைக்கு ஒதுங்குவதட்கும் ஓர் இடம் கிடையாது, இப்போது அங்கு அந்த பள்ளி இல்லை வேறு ஒரு இடத்தில் மகா வித்தியலயமாகிவிட்டது.
ஆனாலும் நான் ஊருக்கு போனால் எப்படியாவது அங்கு போக மறப்பதில்லை காரணம் என் ஹீரோ அங்குதான் இருக்கிறார், ஆமாங்க.



இவர்தான் அந்த பள்ளிக்கூடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய ஆற்றங்கரை தான் அய்யாவின் இருப்பிடம் காலையில் வரும்போதும் வீட்டுக்கு போகும்போதும் இவரை கடந்துதான் போகவேண்டும். பரீட்சை வந்தால் இவருக்கு ஒரே குஷிதான் சூடம், பத்தி,பால், பழம், தேங்காய் என அமர்களப்படுத்தி விடுவோம்.

மழை நேரத்தில் இவரை கடந்து போகும்போது வந்தால் தப்பித்தோம். ஆனால் மழை நின்றால்தான் இவருக்கு நிம்மதி கத்தி கூச்சல் போட்டு மனதுக்குள் அழுதுதே விடுவார். அப்படி பட்ட இவரை சத்தியமாய் அந்த ஊரை விட்டு வந்ததும் கொஞ்ச நாள் மறந்தே போனேன். ஆனால் விடுவாரா

அடிக்கடி அந்த பாதை தெருவோரம் உள்ள பாறைகள் என் கனவில் வரத்தொடங்கியது உண்மையா அவர் வரவே இல்லை. எதோ என் மனதுக்கு தோன்ற அடுத்த வாரமே புறப்பட்டு போனேன். அன்றிலிருந்து ஒவ்வொரு முறையும் ஊருக்கு போனால் அங்கு போகாமல் வருவதே இல்லை. அந்த ஊர் காரர்கள் எல்லோருமே சொல்வார்கள் அந்த ஊரில் படித்த மாணவர்களிலேயே நான் மட்டும்தான் இன்னும் மறக்காமல் இங்கு வந்து போகிறேன் என்று. அதான் இந்த முறை கையோடு கொண்டுபோன என் கேமராவில் அய்யாவை அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.







Saturday, October 10, 2009



நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ரொக்கெட்டுக்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.

மொத்தம் 2 ரொக்கெட்டுக்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் 'சென்டார்' என்ற ரொக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ரொக்கெட் மோத விடப்பட்டது.

2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட், மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து 'ஷெபர்டிங்' என்ற 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. முதல் ரொக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ரொக்கெட்டும் விடப்பட்டது.

நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஆய்வுக்காக 'எல்கிராஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவியதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கவனம் நிலவின் மீது திரும்பியுள்ளது. 'எல்கிராஸ்' அனுப்பும் திட்டத்தின் செலவு 100 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆவது ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான முக்கியத் தகவல்களுக்கும் இந்த 'எல்கிராஸ்' திட்டம் உதவும்.

'எல்கிராஸ்' செயற்கைக் கோள், ஜூன் 18ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஷெபர்டிங் ரொக்கெட்டில், அறிவியல் சார்ந்த அதி நவீன சாதனங்களும், நவீன கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு ரொக்கெட்டுக்கள் மூலமும் நாசாவுக்கு பல்வேறு தகவல்கள் அனுப்பப்படவுள்ளன. அதை ஆய்வு செய்து நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது நாசா.

Friday, October 9, 2009

கிளி வாங்கப்போய்...

எப்போதோ படித்து சிரித்தது.


அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைச்சா. கிளி விக்கறவனைப் பார்த்துக் கேட்டா,"ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?"

"போடாதும்மா. சாதுவான கிளி"

"மரியாதை இல்லாம பேசுமா?"

"பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்"

"ரெண்டையும் புடிச்சு இழுத்தா?"

"கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!"ன்னு கத்துச்சு கிளி.

Thursday, October 1, 2009

நான் எழுதிய கவிதைகளை
நீ வீசி எரிந்தும் ......
நான் மறுபடியும்
மறுபடியும் ஏன் உனக்கு
தருகிறேன் தெரியுமா
காற்றாவது வாசித்து
உன் காதில் சொல்லும்
என்பதால்.

*****